112. இல்லை இல்லை இல்லை என்று இயம்புகின்ற ஏழைகாள்.
இல்லை என்று நின்ற தொன்றை, இல்லை என்னலாகுமோ?
இல்லை அல்ல அது ஒன்றுமல்ல, இரண்டும் ஒன்றி நின்றதை,
எல்லை கண்டு கொண்ட பேர், இனி பிறப்பதில்லையே !
திராவிடர்கள் தான் இல்லை இல்லை என்பார்கள் . அவர்களைத் தான் ஏழைகள் என்கிறார். அந்த இறைவன் தான் அவனே இல்லை என்று நிற்கிறான். மறைந்து நிற்கும் அவனை, இல்லை என்று சொல்லலாகுமோ? என்கிறார். அந்த இறைவன், இல்லை அல்ல என்கிறார். அது ஒன்றல்ல , நான் என்பவனும் அதுவும் ஒன்றி நின்றதை , அந்த எல்லையை கண்டு கொண்டவர்களுக்கு இனி பிறவாத நிலை கிட்டும் என்கிறார். இப்படி நம்முள் ஆழ் மனமாக நம்மோடு இல்லாதது போல் மறைந்து உள்ளான். அமைதியாக சில மூச்சுப் பயிற்சி ,தியான பயிற்சியின் மூலம் ஆழ்மனதில் உள்ளே செல்ல முடியும். அப்படி நம் பிரச்சினைகளின் போது நம்மை அறியாமல் , உள்ளே சென்று பதில் கிடைத்து , விநாடிகளில் மீண்டு இருப்போம். அந்த நொடிகளை நிமிடங்களாக்கி, மணிகளாக்கி, நாட்களுக்குள் செல்வது தான் இரண்டும் ஒன்றி என்பது. இப்படி எளிமையானவன், இலக்கணம் இல்லாதவன். அவனைத் தேடி அலைய வேண்டியதில்லை. என்கிறார். தேடுகிறோம் என்றாலே அவன் நம்மோடு எளிமையாக இருப்பதை நாம் அறியவில்லை என அர்த்தம். அவனை தேடுவதை விட்டு விட்டு கைபிடிக்க பழக வேண்டும். அப்படி அவன் கை பிடித்து ஒன்றியவர்களுக்கு இனி பிறப்பில்லை என்கிறார்.
Tags: சிவவாக்கியம்
No Comments