98. பேசுவானும் ஈசனே, பிரம்ம ஞானம் உம்முளே!
ஆசையான ஐவரும், அலைந்து அலைகள் செய்கிறார்,
ஆசையான ஐவரை அடக்கி ஓர் எழுத்திளே,
பேசிடாது இருப்பரேல் நாதம் வந்து ஒலிக்குமே!.
தொட்டனைத்தூறும் மணற்கேணி, மாந்தர்க்கு,
கற்றனைத்தூறும் அறிவு. என்ற திருக்குறளில், நமக்கு வெளியே படிக்க நூல்கள் தேவையில்லை, வேண்டுவோர்க்கு வேண்டிய அறிவை, நம் உள்ளே இருந்து பெறலாம் என்பதை உணர்ந்த நம் முன்னோர்கள் , நம் மறை நூல்களை அழித்தாலும், வேண்டிய பொழுது நம் முன் வெளிப்படும் என கவலைப்படாமல் விட்டு விட்டனர். இப்படி மேல் மனத்தில் நம்மோடு , நமக்குத் தெரிந்த மொழியில் பேசிக் கொண்டு இருப்பவன் நம் ஈசனே என்கிறார். இந்த பேரண்டத்தை பற்றிய அத்தனை அறிவும் உம்முளே என்கிறார். ஆனால் இந்த ஆசையான ஐம் புலன்களும் நம்மை , அந்த பேரறிவை அடைய விடாமல், அலைந்து அலைகள் செய்கின்றன. அந்த ஐம் புலன்களையும், அடக்கி வா எனும் (காற்றை ) மூச்சை கவனித்தோமானால், மேல் மனதில் பேசாமல் இருப்போமானால், நாதம் வந்து ஒலிக்கும் என்கிறார். இந்த ஐம்புலன்களின் இச்சைக்கு ஆட்படாமல், தேவைக்கு மட்டும் உபயோகப் படுத்தினாலே, நாம் அறிவோம், நமக்கு பிரச்சினைகள் வருவதில்லை. நம் மேல் மனதில் பேசுவதை விட்டுவிட்டு, ஆழ்மனதில் அமைதியாக, ஒரு கேள்வி கேட்டு விட்டு இருந்தால் , அந்த நாதம் சரியான பதிலாக நமக்குள் ஒலிக்கும். இதை அனுபவித்தால் பிறகு அதுவே நம்மை அடுத்தடுத்து கூட்டிச் செல்லும்.
Tags: சிவவாக்கியம்
No Comments