36. கோயிலாவது ஏதடா? குளங்கலாவது ஏதடா?
கோயிலும், குளங்களும், கும்பிடும் குலாமரே!
கோயிலும் மனத்துள்ளே, குளங்களும் மனத்துள்ளே,
ஆவதும், அழிவதும் இல்லை இல்லை இல்லையே!.
நமது 5 புலன்களால், நாம் எதை உணர்ந்தாலும், அதை உணரக் கூடிய , நான் எனப்படுவது எது ?என்பதை புரிந்து கொள்வது தான் மிகவும் முக்கியம். ஏனென்றால் நாக்கின் மூலம் சுவை அறிகிறோம். ஆனால் அந்த நாக்குக்கு அதன் சுவை தெரியாது. அந்த சுவையை தகவல்களாக மூளைக்குக் கடத்துவது தான் நாக்கின் வேலை. இப்படி ஐம்புலன்களில் இருந்து வரும் , தகவல்களை , மூளையின் உதவியோடு, பிரித்து அறிந்து, வகைப்படுத்தி தெரிந்து கொள்வது அது. மூளைக்கும் தெரியாது அந்த சுவை. அந்த அது தான், கண்களால் பார்க்கக் கூடிய கோயில், குளம், குலம், அனைத்தையும் அறிவது. குழந்தையிலிருந்து, நாம் கோயிலைப் பற்றியும், குலங்களைப் பற்றியும், பல்வேறு கருத்துக்களை அறிந்து, அதை மனத்தில் கருத்தாக நம்பிக் கொண்டு உள்ளோம். இதையெல்லாம் அறியும் அந்த அதை , மனமாகவும், உள்ளமாகவும், நானாகவும் வெவ்வேறு பெயர்களில் அறிகிறோம். கோயில்களையும், குளங்களையும் கும்பிடும் குழப்பம் நிறைந்தவர்களே! அந்த கோயில், குலங்கள் அனைத்தும், நம் மனத்துள் இருக்கும் கருத்துக்களே. இந்த இயற்கையில் உள்ள அனைத்துப் பொருட்களும், தோற்றங்களும், வடிவங்களும், மாறிக் கொண்டு இருக்கும். ஆனால் மூலம் மாறாது . ஆவதும் அழிவதும் இல்லை இல்லை இல்லை என்று அழுத்தமாக கூறுகிறார்.
Tags: சிவவாக்கியம்
No Comments