299. அந்தரத்தில் ஒன்றுமாய், அசைவுகால் இரண்டுமாய்,
செந்தழலில் மூன்றுமாய்ச் சிறந்த அப்பு நான்குமாய்
ஐந்து பாரில் ஐந்துமாய் அமர்ந்திருந்த நாதனை,
சிந்ததையில் தெளிந்தமாயை ,யாவர் காண வல்லரே.
நாம் நினைப்பதை பேச்சாக , ஒலியாக அடிவயிற்றில் (மூலாதாரத்திலிருந்து) இருந்து தொண்டை வரை அதிர்வாக்கி , நாவை சுழற்றி , ஒற்றி, வருடி வார்த்தைகளாக்குபவன் தான் நாதன்.
அவன் அந்தரத்தில் ஒன்றுமாய் என்றால் , நாம் மனதால் , எண்ணங்களாக, கருத்தாக நினைப்பதைத்தான் அப்படி கூறுகிறார்.
அசைவுகால் இரண்டுமாய் என்றால் , நம் உடல் இயங்க காற்று மிகவும் முக்கியம். அதை உள் மூச்சாகவும், வெளி மூச்சாகவும் இரண்டு விதமாக இயங்குவதைத் தான் சொல்கிறார்.
செந்தழலில் மூன்றுமாய் என்றால் இடகலை, பிங்கலை , சுழுமுனை எனும், சந்திரன் எனும் குளிர்ச்சி, சூரியன் எனும் சூடு அக்னி எனும் பசி. அக்னி எனும் பசி நம் உணவை சத்தாக மாற்றி, கண்களில் ஒளியாக அறிவது சந்திரகலை, சூரிய கலை.
சிறந்த அப்பு நான்கு மாய் என்றால் ரத்தம், வியர்வை, எச்சில், சிறுநீர் என நீர் தத்துவமாக நம் உடலில் அனைத்து செல்களையும் சென்று சேர்ந்து, கழிவுகளாக நீராக வெளியே, நம் உடலை இயக்கக் காரணமாக இருக்கும் அப்பு.
பாரில் என்றால் நிலம், ஐந்தாவது பூதமான தாதுக்களால், எலும்பு, சதை, நரம்பு, முடி, தோல் என ஐந்துமாய் அந்த நாதன் தான் நம் உடலாக இருப்பதை சிந்தையில் தெரிந்து , தெளிந்து , அந்த மாயையை புரிந்து கொள்பவர்களே வல்லவர்கள் என்கிறார்.
Tags: சிவவாக்கியம்
No Comments