295. தத்துவங்க ளென்றுநீர் தமைக்கடிந்து போவிர்காள்
தத்துவஞ் சிவமதாகில் தற்பரமும் நீரல்லோ
முத்திசீவ னாதமே மூலபாதம் வைத்தபின்
அத்தனாரு மும்முளே யறிந்துணர்ந்து கொள்ளுமே.
தத்துவங்கள் 96 என்றும் , நம் உடல் 96 தத்துவங்களால் ஆனது என படித்து விட்டு அதை தேடி புரிந்து கொள்ள முடியாமல் அந்த தத்துவங்களை கடிந்து கொள்பவர்களைப் பார்த்து சொல்கிறார், அந்த 96 தத்துவங்களும் சிவத்திலிருந்து வெளிப்பட்டது என்றால் அதில் தற்பரம் நீரல்லோ! என்கிறார்.
அதாவது திகிரி கணக்கில் தற்பரை என்பது மிகச் சிறிய பாகம். அது போல் சிவத்தின் ஒரு மிகச் சிறிய துளிதான் நம் உடல் என்கிறார்.
நம்முடைய சீவன் என்பது மூலமான சிவம் தான். இதை புரிந்து உணர்த்து கொள்வதுதான் முத்தி . இதைப் புரிந்து உணர்ந்து கொண்டால் அந்த அத்தனார் உம்முள் இருப்பதை உணர முடியும்.
வேறு வேறு உயிரினங்கள் வேறு வேறு அல்ல , அனைத்தும் சிவத்திலிருந்து உருவானது தான். ஒளி வடிவமாக கண்ணுக்குத் தெரிவது அனைத்தும் சிவம் தான் என்கிறார். நம் உடலை உணர்ந்து கொண்டால் தான் இந்த மெய்யை உணர முடியும் என்கிறார்.
Tags: சிவவாக்கியம்
No Comments