மூச்சுக்காற்று முழுவதுமாக நின்று விடப் போகிறது.
உடல் கொஞ்சம் கொஞ்சமாக உருக்குலைந்து போய்க் கொண்டிருக்கிறது.
இன்னும் சில கணங்கள் உயிர் ஊசல் ஆடும்.
இல்லை சில நிமிடங்கள் தாமதப்படுத்தி உயிர் வதைக்கலாம். இருள் மட்டுமே நிதர்சனம்.
ஆசை மனைவி கைகளைப் பிடித்திருக்கிறாள்.
மார்பு மீது புதைந்து கிடக்கும் குழந்தைகள் இருவரில்
ஒருவரின் சிறு அசைவு இதயத்தை ரணமாக்கியது .
கனவு கலைந்து எழுந்திடும் நம்பிக்கை தகர்ந்து பூமியின் அழுத்தம் மெல்ல ஏறுகிறது.
நிகழ்ந்தது என என்று நினைப்பதற்குள் உலகம் சுருங்கிவிட்டது.. உலகை விட்டுச் செல்லும் கடைசி நொடி…
பகை மறைந்து பக்கத்து வீட்டுக்காரனை ஜன்னலில் எட்டிப் பார்க்க முடியவில்லை. எதிரில் ஆசை ஆசையாய் வீடு கட்டி குடியேறிய குடும்பம்
அருகில் புது ஜோடி குடியிருக்கும் வீடு
கடைசி வீட்டில் வரிசையாய் நிற்கும் வாகனங்கள்
பக்கத்துத் தெருவில் வெளியூர் தொழிலாளிகள் தங்கியிருக்கும் குடிசைகள்
அடுத்ததோர் பங்களாவில் முதலாளியின் வீடு
இவையெல்லாம் என்னவானதென்று தெரியவில்லை…
இயற்கையின் சீற்றத்திற்கு மலையரசி அசைந்து கொடுத்து விட்டாள்..
பூமி தன்னைத்தானே விழுங்கிக் கொண்டிருக்கிறது.
இயற்கையில் ஏதோ ஒரு மாற்றம் என்று உணர்ந்து பறவைகள் பறந்து போயிருக்கக்கூடும். விலங்குகள் இடம் பெயர்ந்திருக்கக் கூடும்.
ஆனால் எல்லாம் தெரிந்த மனிதன் மட்டும் எதையும் உணராமல் மண்ணுக்குள் புதைந்து கொண்டிருக்கிறான்.
அன்பு, ஆசை, காதல், நட்பு, பணம், வீடு, பதவி வேலை கர்வம் ஆணவம், பகை, நல்லவன், கெட்டவன் என்ற எந்தப் பாகுபாடும் இன்றி அனைத்தையும் ஈர்த்துக் கொண்டிருக்கும் இந்த பூமி மேலிருக்கும் மனிதர்களுக்கு என்ன சொல்லி விடப் போகிறது.
பூமியில் நிரந்தரம் என்று எதுவும் இல்லை .
இந்த தத்துவமும் நிரந்தரம் இல்லை இன்னும் சில தினங்களில் மறந்து போகும்.
ஆம் எதுவும் நிரந்தரமில்லை என்ற எண்ணம் மட்டும் மனதை வருட மெல்லக் கண்களை மூடி மரணித்த அந்த மனிதனின் கடைசி நிமிட நினைவுகள் இப்படி இருந்திருக்குமோ?
….
நிலச்சரிவில் உயிரிழந்த வயநாட்டு மக்கள் அனைவரின் ஆத்மாவும் சாந்தி அடையட்டும்…
நன்றி
Tags: வரலாறு
No Comments