நம் முன்னோர்கள்

நம் முன்னோர்கள்

நம் முன்னோர்கள் ஆதிக்காலத்தில் மண்பாண்டத்தில் சமைத்தார்கள். கொஞ்சம் வசதி வாய்ப்போடு இருந்தவர்கள் வெண்கலம், பித்தளையில் சமைத்தார்கள். கொஞ்ச காலத்திற்கு பிறகு மண்பாண்டத்தில் சமைத்தவர்கள், நாகரிகம் என்ற பெயரில் உடல் நலத்திற்கு கேடான அலுமினிய பாத்திரத்திற்கு மாறினார்கள், அலுமினிய பாத்திரத்தில் சமைத்தவர்கள் மறுபடியும் நாகரிகம் என்ற பெயரில் உடல் நலத்திற்கு கேடான எவர் சில்வர் பாத்திரத்திற்கு மாறினார்கள் எவர் சில்வர் பாத்திரத்தில் சமைத்தவர்கள் மறுபடியும் நாகரிகம் என்ற பெயரில் உடல் நலத்திற்கு கேடான நான்ஸ்டிக் பாத்திரத்திற்கு மாறினார்கள்..

 

இதில் விஷயம் என்னான்னா பணக்காரர்கள் பணம் வரவர ஒவ்வொன்றுக்கும் மாறிக்கொண்டே போனார்கள் மண்பாண்டத்தில் சமைத்தவர்களை பார்த்து முகம் சுழித்தார்கள், உங்க வீட்டில் நான்ஸ்டிக் இல்லையா? அது இருந்தால் எண்ணெய்யே இல்லாமல் தோசை , சப்பாத்தி சுடலாம். குக்கர் இருந்தால் சீக்கிரம் சமையல் செய்திடலாம் அப்படிங்கிற மனநிலை நிறைய பேரிடம் இருந்தது. அப்ப இந்த வசதி குறைந்தவர்கள் மனசுக்குள் ரொம்ப கஷ்டப்பட்டார்கள் நாம எப்ப இந்த மாதிரி அழகான கண்ணை கவர்கின்ற பாத்திரத்தில் சமைக்கப் போறோம் கண்டிப்பா நாமளும் நல்லா பணம் சம்பாதிச்சு இந்த நான்ஸ்டிக் பாத்திரம் வாங்கி நம் கிச்சனை அழகுப்படுத்தனும் னு கனவு கண்டவர்கள் ஏராளம். ஓரளவுக்கு அவர்களுக்கு வசதி வர வர அவர்களும் ஒவ்வொன்றுக்கும் மாறிக்கொண்டே வர.. நான்ஸ்டிக் பாத்திரம் வாங்கலாம்னு நினைக்கையில் ,

 

பழைய குருடி கதவை திறடிங்கிற கதையா இந்த பணம் உள்ளவர்கள் எல்லாம் மண் பானையில் சமைத்தால் தான் உடம்புக்கு நல்லதுன்னு சொல்றாங்க இனிமே நாங்க மண்பானையில் தான் சோறாக்கி குழம்பாக்கி விளையாட போறோம்னு சொல்ல அதற்கு தகுந்த மாதிரி மண்பாண்டம் விற்பனை செய்தவர்களும் குடிக்கிற தண்ணி பாட்டில் ஆரம்பித்து கடைசியா சுடுகாட்டில் உடைக்கிற கொள்ளிக்குடம் வரைக்கும் நல்ல டிசைனா செய்ய தொடங்கி இப்ப அதன் விலையும் பார்த்திங்கன்னா 30 ரூபாய்க்கு வாங்க ஆளில்லாமல் இருந்த மண்சட்டி இன்னைக்கு 200 ரூபாய் தோசைக்கல், ஆப்ப சட்டி,சோற்றுப்பானை,கூழ்ச்சட்டி, இட்லி பானையின்னு எல்லாமே விலை ஏறிப்போச்சு.

 

கடைசியில நான்ஸ்டிக் பாத்திரம் வாங்க ஆசைப்பட்டான் பாருங்க கடைக்கோடியில் இருக்கிற அவன் யோசிக்கிறான். ஏன்டா நான் சிவனேன்னு மண் சட்டியிலதான் சோறு குழம்பு வைச்சு சாப்பிட்டேன் என்னை அற்பமா பார்த்தே இப்ப நான் அவ்வளவு தூரம் ஓடிவந்து நான்ஸ்டிக் வாங்க வரும் போது நீ மண்பானைதான் நல்லதுன்னு சொல்லி வாங்குறீயே இப்ப நான் என்னத்தடா வாங்குறது? நான்ஸ்டிக் விலைக்கு மண்சட்டி விக்கிது என்னால நான்ஸ்டிக்கும் வாங்க முடியல மண்சட்டியும் வாங்க முடியலன்னு தலையில கைய வைச்சிக்கிட்டு உக்காந்துட்டான் . வாழ்க்கை ஒரு வட்டங்கிறது எவ்வளவு உண்மை பாருங்க.

 

ஆதிகாலத்தில் நாம் சாப்பிட்ட சாப்பாடு நம் வீட்டில் இருந்த சமையல் பாத்திரங்கள் எல்லாமே ஆரோக்கியமானது கடைசியில அங்க சுத்தி இங்க சுத்தி பழமையை நோக்கித்தான் வர்றோம். ஆரம்பத்தில் கரி சாம்பலை போட்டு பல் விளங்கினார்கள் அதில் சாம்பல் சத்தும் உப்பு சத்தும் இருந்துச்சு, வேப்பங்குச்சியும் ஆலங்குச்சியிலும் பல் விளக்கினார்கள் இப்ப உங்க பேஸ்ட்ல உப்பு இருக்கா? வேம்பு இருக்கா? கிராம்பு இருக்கான்னு ? ஓடி வர்றாங்க.

 

இருப்பது அப்படியே இருந்திருக்கலாம் விலைவாசியும் அப்படியே இருந்திருக்கும் எல்லாத்தையும் மாத்தி எல்லாத்தையும் உயர்த்தி கடைசியில் சிரமம் சங்கடபடுவது என்னவோ சாதாரண மக்கள் தான். யார் யாரை ஏமாற்றுகிறார்கள் எல்லாமே வியாபாரம் நோக்கமா இல்லை மக்களே தன்னை மாற்றிக்கொள்கிறார்களா ஒன்றுமே புரியவில்லை. நவீன வியாபார உலகத்தில் விற்கப்படுவது வெறும் பொருட்கள் மட்டுமல்ல மனித உயிர்களும் தான்.

நான் இப்பவரைக்கும் நான்ஸ்டிக் பாத்திரம் யூஸ் பண்ணவில்லை பண்ணவும் மாட்டேன் ஏன்னா அதில் அவ்வளவு உடலுக்கு தீங்கான விஷயம் இருக்குன்னு தெரியும். இப்பவும் என் வீட்டில் இருப்பது மண்சட்டி, அலுமினியம், எவர் சில்வர், பித்தளை இவ்வளவுதான். நான் இந்த நவீன உலகத்தில் வாழ்கிற பழமைவாதியின்னு சொல்லிக்கப் பெருமைப்படுறேன்.

 

நாம் தான் சிந்தித்து செயல்பட வேண்டும்!!!

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *