238. சகதி நீ! தயவு நீ! தயங்கு சங்கின் ஓசை நீ !
சித்தி நீ! சிவமும் நீ! சிவாயமாம் எழுத்து நீ!
முக்கி நீ! முதலும் நீ! மூவரான தேவர் நீ !
அத்திறமும் உம்முளே! அறிந்துணர்ந்து கொள்ளுமே!.
எட்டு வகையான சக்திகள் உண்டு. அந்த சக்திகளால் உருண்டு திரண்டு ஆனவன் தான் நீ! என்கிறார் – தயவு என்றால் அருள், அன்பு என்பதாகும். அந்த அருள் நீ என்கிறார். தயங்கு என்றால் அசைவு என்று பொருள். அந்த அசையும் அதிர்வான ஓசை நாதம் நீ! என்கிறார். சித்தமும் நீ என்கிறார். அதாவது நாம் அறியாமல் நம் உடலில் அநேக வேலைகள் சரியாக நடந்த வண்ணம் உள்ளது. அதை சித்தம் என்போம். அந்த அறிவு சித்தி அது தான் நீ! அண்டத்தில் உள்ள அத்தனை பொருட்களையும் கொண்டு உருவானவன் நீ .அதனால் உன்னை சிவம் என்கிறார்.
உயிர் பிறவாமல் இருப்பதுதான் முக்தி அதற்குத் தகுதியானவன் நீ! இதற்கெல்லாம் காரணமான முதல் ஆதி அதுவும் நீ என்கிறார். மூவரான தேவர் நீ என்றால், வெளி, காற்று, வெப்பம் எனும் முதல் மூன்றும் தான் ஆதியான தேவர் அவர்கள் தான் நீ என்கிறார். இப்படி அத்தனை திறன்களும் உம்முள்ளே பரிபூரணமாக இருக்கிறது. அதை அறிந்துணர்ந்து கொள்ளுங்கள் என்கிறார்.
Tags: சிவவாக்கியம்
No Comments