231. ஆடு நாடு தேடினும். ஆனை சேனை தேடினும்,
கோடி வாசி தேடினும், குறுக்கே வந்து நிற்குமோ?
ஓடி இட்ட பிச்சையும், உகந்து செய்த தர்மமும்,
சாடி விட்ட குதிரை போல தர்மம் வந்து நிற்குமே!
ஆடு நாடு என தேடி தேடி செல்வம் சேர்த்தால் கடைசி காலத்தில் உதவும் என நினைக்கிறோம். ஆனை சேனை என காவலுக்கு வைத்து பாதுகப்பாக வாழலாம் என்றாலும் கண்கூடாக பார்க்கிறோம் எதுவும் நிலைப்பதில்லை. ஒய்ந்த போது ஆனை சேனை, ஆடு நாடு எல்லாம் வேறு ஒருவருக்குப் போய் விடுகிறது. பாதுகாப்பு அற்று இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. கோடி வாசி செய்து உடலை நன்றாக வைத்து இருந்தாலும், காலன் வந்து அழைக்கும் போது வாசி குறுக்கே வந்து காப்பாற்றாது என்கிறார். சரி, ஓடி இட்ட பிச்சை அல்லது, தேவைப் பட்டவர்களுக்கு காலத்தில் உகந்து செய்த தர்மம் இது ஏதாவது குறுக்கே வந்து காலனிடம் நிற்குமா? என்றால் குதிரையை அவிழ்த்து சாடி விட்டாலும் அது சென்று மீண்டும் அதன் வீட்டிற்குத் திரும்பி வந்து நிற்பது போல நாம் செய்த தர்மங்கள் நம் வாழ்நாளில் நமக்குத் தேவைப்படும் போது காலனை எதிர்க்க குறுக்கே வந்து நிற்குமே என்கிறார்.
Tags: சிவவாக்கியம்
No Comments