228. நாலதான யோனியுள், நவின்று நின்று ஒன்றதாய்,
ஆறதான வித்துலே அமர்ந்து ஒடுங்குமாறு போல்,
சூலதான உட் பலன் சொல்வதான மந்திரம்,
மேலதான ஞானிகாள் விரித்துரைக்க வேணுமே!.
இந்த உலகில் உள்ள உயிரினங்களை நான்கு விதமான யோனி பேதங்களாக பிரிக்கலாம்.
1. உப்புசத்தில் (வெப்பத்தில்) பிறக்கும் உயிரினங்கள் புழு, பூச்சிகள் .
2. விதையில் பிறக்கும் உயிரினங்கள் மரம், செடி, கொடிகள்.
3. முட்டையில் பிறக்கும் உயிரினங்கள். பாம்பு, பல்லி, பறவை இனங்கள்.
4. குட்டி போட்டு பிறக்கும் உயிரினங்கள்.
இப்படி நான்கு வகையான யோனி பேதங்களில் நான்காவதான குட்டி போட்டு பிறக்கும் உயிரினங்களில் மனிதன் பிறக்கிறான். அந்த நாலதான யோனியில் , அதாவது பெண்களின கருவறையில் நவின்று நின்று ஒன்றதாய் என்றால் அங்கே கருமுட்டையாக உருவாகி மலர்ந்து காத்திருப்பது ஒன்றதாகி இருக்கும் நாதம். (அதிர்வு).
ஆறதான வித்தின் உள்ளே அதாவது ஆண்களின் விதைப் பையில் விதையாக இருக்கும் அ எனும் உயிர் ஒளியாக அந்த உயிரைப் பற்றிய அத்தனை தகவல்கள் அடங்கிய பெட்டகமாக அமர்ந்து ஒடுங்குமாறு போல்,
சூலதான உட்பலன் சொல்வதான மந்திரம் ஓம் எனும் அ உம் உ என்றால் உருவம் உடல் சூல் கொண்டு கருவாகி உருவாகி, உடலாக பிறக்கிறது.
இந்த உயிர் உடலாக பிறக்கும் தத்துவத்தை மேல் நிலையில் இருக்கும் ஞானிகள் விரித்து உரைக்க வேணுமே! என்கிறார்.
Tags: சிவவாக்கியம்
No Comments