224. நல்ல மஞ்சனங்கள் தேடி நாடி ஆடி ஓடுறீர்.
நல்ல மஞ்சனங்கள் உண்டு நாதனுண்டு நம்முளே.
எல்லை மஞ்சனங்கள் தேடி ஏக பூசை பண்ணினால்,
தில்லை மேவு சீவனும் சிவ பதத்துள் ஆடுமே!
மஞ்சனம் என்றால் திருக்குட நீராட்டு . கோயில்களில் அபிசேக ஆராதனை என வகை வகையாக செய்வார்கள். அவற்றைக் காண கோயில் கோயிலாக நாடி ஆடி ஓடுறீர் என்கிறார்.
நல்ல மஞ்சனங்கள் உண்டு நம்முளே. என்றால் நம் திருச்சிற்றம்பலத்தில் சுரப்பிகள் உள்ளது. அவற்றில் வகை வகையாக ஆனந்தமான நீராடலுடன் நம்முள் உள்ள நாதனை தரிசிக்க முடியும்.
தில்லை மேவு சீவனும் என்றால் இந்த பரந்த வெளிதான் பேரம்பலம். நம் தலைக்குள் இருப்பது வெளிதான். அதை சிற்றம்பலம் என்பர். அதில் நான் எனும் உயிர் இந்த ஐந்து ஞானேந்திரியங்கள் மூலம் இந்த அண்டத்தையும், பிண்டத்தையும் , புரிந்து கொள்கிறது.
ஐந்து சிவதத்துவங்கள் (அ ஆ, இ, ஈ, உ,) உண்டு. அந்த சிவபதத்துள் இந்த சீவனாகிய நம் உயிர் அந்த இறைவன் நம்முள்ளும் உறைந்து இருப்பதை உணர்ந்தால் ஆடும் என்கிறார். எல்லை மஞ்சனங்கள் தேடி ஏக பூசை பண்ணினால் என்றால் தேடி தேடி ஓடி திருக்குட நீராடல்களைப் பார்த்துப் பார்த்து எது எல்லை என அறியாமல் நமக்குள்ளேயே ஏக பூசைகள் செய்து இறைவனை நாடினால் அவன் நம்முள்ளே இருந்து நம் உடலை இயக்கிக் கொண்டு இருப்பதை அறிந்து நம் சீவனும் இயங்க அவன் இயக்கம் தான் மூலம் என்பது புரிந்தால் நாம் செய்வதற்கு ஒன்றும் இல்லை என புரிந்து விடும்.
பின் இந்த உலகில் நம் பங்கு என்ன? என அவரவர்கள் உணர்வர்.
Tags: சிவவாக்கியம்
No Comments