171. திரும்பி ஆடு வாசலெட்டு , திறம் உறைத்த வாசல் எட்டு.
மருங்கிலாத கோலம் எட்டு, வன்னி ஆடு வாசல் எட்டு.
துரும்பில்லாத கோலம் எட்டு , சுற்றி வந்த மறுவரே.
அரும்பிலாத பூவும் உண்டு ஐயன் ஆனை உண்மையே!
திரும்பத் திரும்ப உடல் எடுக்க காரணம் நம் எண்ணங்களே! தீராத ஆசைகள் தீர எடுக்கும் உடலினால் மீண்டும் மீண்டும் பிறவிப் பெருங்கடலில் சிக்கி விடுகிறோம். உடல் எடுக்க ஆடும் வாசல் எட்டு வடிவத்தில் தான் இருக்கும்.
திறம் என்றால் சக்தி. 8 வகையான சக்திகள் பிறந்து ஒடுங்கிக் கொண்டு உள்ளது.
மருங்கு என்றால் உடல். இந்த உடல் எண் சான் (அவரவர் கைகளில் அளந்து பார்த்தால் எட்டு சாண்தான் இருக்கும்) கோலம் தான். இந்த உடல் , ஐம்புலன்கள் மற்றும் மணம் புத்தி சித்தம் எனும் 8 – ல் கட்டுண்ட கோலமாக இருக்கிறது.
வன்னி என்றால் சூரியன். சூரியனுடைய வடக்கு தெற்கு நகர்வை வருடம் முழுதும் கவனித்தால் 8 வடிவத்தில் தான் ஆடும் என்கிறார்.
அனைத்து பொருட்களும் உருவானது , அநாதியாக உள்ளது ம் எனும் அதிர்வான சத்தம் தான். அதன் கோலம் 8. துரும்பிலாத என்றால் சத்தம். வெளி கூட ஒளி எனும் துரும்பால் ஆனது தான். ஆனால் துரும்பிலாதது சத்தம் தான். அதிலிருந்து பிறந்தது தான் அனைத்தும். சத்தமில்லாமல் அனைத்தும் ஒடுங்கி விடும். மீண்டும் சத்தத்தால் எழுந்து ஆடும் மீண்டும் அடங்கும். இவை அனைத்தும் எட்டு.
இவற்றை எல்லாம் வட்டம் என கூறிக் கொண்டு சுற்றிவரும் அறிவில்லாதவர்களே (மருளரே) என்று எள்ளி நகையாடுகிறார்.
அரும்பிலாத பூ என்றால் நம் உயிர்தான் . அதற்கு அரும்பு கிடையாது. அது வளர்ந்து மொட்டு பூ என்று ஆகாது. அது அரும்பிலாத பூ என்கிறார். அது ஐயன் மேல் ஆனை என்கிறார்.
Tags: சிவவாக்கியம்
No Comments