நிழலில்லா நாளை கண்டுபிடித்தது கிரேக்கர்களா? தமிழர்களா?

நிழலில்லா நாளை கண்டுபிடித்தது கிரேக்கர்களா? தமிழர்களா?

நிழலில்லா நாளை கண்டுபிடித்தது கிரேக்கர்களா? தமிழர்களா?
‘நிழலில்லா நாள்’ (Zero Shadow Day) என்றால் என்ன?
பொதுவாக ஒரு பொருளின் நிழலானது சூரியன் உச்சிக்குச் செல்லச் செல்லச் சிறிதாகிக்கொண்டே வரும் என நமக்குத் தெரியும். சூரியன் நம் தலைக்கு நேர்மேலே இருக்கும்போது நிழலின் நீளம் பூஜ்ஜியமாகிவிடும் அதாவது நிழல் காலுக்குக்கீழே இருக்கும். ஆனால் சூரியன் சரியாக தலைக்கு மேலே தினமும் வருவதில்லை. ஆண்டிற்கு இரண்டுமுறை மட்டுமே ஒரு இடத்தில் செங்குத்தாக இருக்கும். ஆக ஒரு இடத்திலுள்ள ஒரு பொருளின் நிழலின் நீளம் ஆண்டிற்கு இருமுறை பூஜ்ஜியமாகின்றது, அந்த நாளையே நிழலில்லா நாள்'(Zero Shadow Day) என்கிறோம்.
எரட்டோஸ்தனஸ் (Eratosthenes)
என்ற கிரேக்க அறிஞர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த
நிழலில்லா நாளன்றுதான் பூமியின் விட்டத்தை அளந்து கூறினாராம். எரட்டோஸ்தனஸ் கி.மு மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க கணிதவியலாளரும், புவியியலாளரும் வானியலாளரும் ஆவார். உலகின் புகழ்பெற்ற நூலகமாக விளங்கிய அலெக்சாண்டிரியா நூலகத்தின் தலைவராக இருந்தார். இவர்தான் முதன் முதலாக நிழலில்லா நாளை உலகிற்குக் கூறியவர் என்பர். இரண்டாண்டுகளுக்கு முன்புவரை நாம் கூட இதைக் கூறித்தான் மாணவர்களுக்குச் செயல்முறை விளக்கம் அளித்துவந்தோம். நமது அண்மைய ஆய்வின்படி கிரேக்கர்கள் நிழலில்லா நாளை முதலில் சொல்லியிருக்க வாய்ப்பில்லை எனத் தெரியவருகிறது.
எப்படி எனச் சற்று விரிவாகப் பார்ப்போம்.
உலகின் அனைத்து நாடுகளிலும் நிழலில்லா நாள் வருமா? என்றால்…
வராது…
கடகரேகைக்கும்( Tropic of Cancer) மகரரேகைக்கும்(Tropic of Capricorn) இடையில் உள்ள நாடுகளில் மட்டுமே இந்நிகழ்வைக் காண முடியும்.
மேலும், இந்நிகழ்வு அனைத்து இடங்களிலும் ஒரேநாளில் நிகழாது. சூரியனின் வடசெலவு நாட்களில் ஒருநாளும், தென்செலவு நாட்களில் ஒருநாளும் என ஆண்டிற்கு இருமுறை நிகழும். அதுவும், சரியான மதிய நேரத்தில்தான் (Local Noon) நிழல் பூஜ்ஜியமாகும்.
எரட்டோஸ்தனஸ் வாழ்ந்த பண்டைய கிரேக்கம் கடகரேகையிலிருந்து வெகு தொலைவில் இருந்தது, எனவே, அங்கே நிழல் பூஜ்ஜியமாகாது. நிழல் பூஜ்ஜியமாகாதப் பகுதியில் வாழ்ந்த ஒருவருக்கு நிழல் பூஜ்ஜியமாவது குறித்த சிந்தனை “முதன் முதலில்” எவ்வாறு வந்திருக்கும்? அதை அவர் மற்றவர்களிடமிருந்து கற்றிருக்க வேண்டும். இவர் இருந்த அலெக்சாண்டிரியாவில்தான் நிழல் பூஜ்ஜியமாகாது, கடகரேகையை ஒட்டியிருந்த எகிப்தின் சைன் (இன்றைய அஸ்வான்) நகரில் நிழல் பூஜ்ஜியமாகும் அதுவும் ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே. அந்நாளில் அலெக்சாண்டிரியாவில் நிழலின் நீளத்தை அளந்து அதன் மூலம் பூமியின் சுற்றளவைக் கணக்கிட்டார் என்பார்கள். அது சரியாகக் கூட இருக்கலாம், ஆனால் நிழல் பூஜ்ஜியமாவது குறித்த சிந்தனை கடக, மகர ரேகைகளுக்கு இடையே வாழ்ந்த மக்களுக்குத்தான் “முதன்முதலில்” வந்திருக்க வேண்டும் என்பதுதானே இயல்பு?
தமிழ்நாடானது கடக, மகர ரேகைகளுக்கு இடையே அமைந்துள்ள நிலப்பரப்பாகும். இங்கிருந்து சூரியனின் கிடைமட்ட நகர்வான வட, தென் செலவுகளை நன்றாகக் கவனிக்க முடியும். இப்பகுதியில் ஆண்டுக்கு இருமுறை நிழல் பூஜ்ஜியமாகும், எனவே இங்கிருந்து நிழலில்லா நாளை கண்டுபிடிப்பது
எளிது.
சரி… கண்டுபிடித்தார்களா…?
இங்குள்ள கோயில்களும், அரண்மனைகளும் சிற்ப நூலின் மரபு பிசகாமல் அமைக்கப் பெறும். இவற்றை அமைக்கும் போது நாள், நாழிகை இவற்றுடன் சரியான திசைகளையும் அறிய வேண்டும். அதற்காக நிழல் பூஜ்ஜியமாகும் நாள் தேர்ந்தெடுக்கப்பட்டு, கோயிலோ, அரண்மனையோ அமைக்கப்பட வேண்டிய நிலத்தில் குச்சியொன்று நடப்பட்டு அதனைச் சுற்றி வட்டமிடப்படும். காலை சூரியன் கிழக்கே உதிக்கும் வேளையில் குச்சியின் நிழல் மேற்கே விழும். குச்சி நுனியின் நிழல் வட்டத்தில் விழும்போது அப்புள்ளி குறிக்கப்பட்டு முளையொன்று அடிக்கப்படும். அதேபோல் மதியத்திற்குமேல் குச்சியின் நிழல் கிழக்கே இருக்கும். ஏற்கனவே செய்ததுபோல குச்சியின் நுனியின் நிழல் வட்டத்தின் மீது விழும் புள்ளி குறிக்கப்பட்டு மற்றொரு முளையொன்று அடிக்கப்படும். இப்போது முளையடிக்கப்பட்ட குச்சிகள் கிழக்கு, மேற்கைக் குறிக்கும். சித்திரை மாதத்தில் சூரியன் தலைக்கு நேர் மேலே வரும்போது அக்குச்சிகள் இரண்டும் சரியானத் திசையைக் குறிக்கும். இப்போது கிழக்கு, மேற்குத் திசை அறியப்பட்டுவிட்டது. இக்கோட்டிற்கு செங்குத்தாக நடுக்குச்சி வழியே ஒரு கோடு வரைந்தால் அக்கோடு சரியான தெற்கு, வடக்கைக் குறிக்கும்.
இவ்வழக்கம் சங்கு ஸ்தாபனம் என்ற பெயரில் இன்றும் கோயில் கட்டப்படும்போது பின்பற்றப்பட்டு வருகிறது. கோயில் சிற்பக் கலைக்கு திசையறிதல் இன்றியமையாதது. திசைகளை வானியல் மூலமே அறியமுடியும். நிழலில்லாத நாள் எனப்படும் Zero Shadow Day என்பதைப் தமிழர்கள் அறிந்திருந்தனரா? என்றால், ஆமாம். அந்நாளிலேயே மேற்கூறிய திசையறியும் செயல்பாடுகள் நடைபெற்றிருக்கின்றன.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *