நாம் வசிக்கும் பூமியில் நிலநடுக்கோட்டில், என்று சூரியன் வட செலவு சமயத்தில் உதிக்கிறதோ! (மார்ச் 20 காலை 8.30 மணி vernal equinox) அன்று தான் வட செலவு சம நாள். அன்று தான் பொன்னேர் பூட்டும் விழா நடத்த வேண்டும். அதற்கு அடுத்த நாள் (மார்ச் 21) சித்திரை 1 ஆரம்பிக்கிறது. சம நாளுக்கு பின்வரும் முதல் பௌர்ணமி தான் சித்ரா பௌர்ணமி. வட செலவு சமநாளுக்குப் பிறகு சூரியன் வடக்கு நோக்கி பயணம் செய்து கடக ரேகையில் திரும்பும் நாளை, கதிர் திருப்பு நாள் என்கிறோம். அதனை கடக சங்கராந்தி என்று சொல்கிறோம்.
ஆடிப்பெருக்கு கர்ப்போட்டம்
கடக சங்கராந்தி (Summer solstice ஜூன் 20) முடிந்து அடுத்த நாள் (ஜூன் 21) ஆடி 1 ஆரம்பம் ஆகும். ஆடி 4 மதியம் 2.15 மணியிலிருந்து திருவாதிரை நட்சத்திரத்தில் ஆடி 17 வரை கற்போட்டம் பார்க்கும் காலம். அந்த 14 நாட்களும் இரவு பகல் தொடர்ந்து காற்றையும், மழையையும் கவனித்தால் அடுத்த 6 மாதம் கழித்து அதாவது கையிலிருந்து அடுத்த வருடம் ஆனி வரையுள்ள மழை, வெயில் நாட்களை அறிந்து கொள்ளலாம். அதனால் தான், நாம் சொந்த விழாக்களையும், கோவில் திருவிழாக்களையும் அந்த நாட்களில் தவிர்த்து விட்டு கர்ப்போட்டம் பார்ப்பதை மட்டும் இலக்காக கொண்டிருப்போம். ஆடி 18 அன்று புதியதாக திருமணமான பெண் பிள்ளைக்கு தலை ஆடி என்று புதுத்துணிகளை எடுத்து தங்கத்தில் சீர் செய்வது நம் வழமை. தீபாவளி சமயத்தில் தலை தீபாவளி கொண்டாடுவது நம் வளமையல்ல.
விநாயகர் சதுர்த்தி
தென் செலவு சமநாளின் (செப்டம்பர் 23 Autumnal equinox) அருகில் வரும் வளர்பிறை சதுர்த்தியைத் தான் நாம் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடுவோம். விநாயகர் சதுர்த்தி அடுத்த நாளில், விநாயகர் சிலையை கரைத்து விழாவை முடிப்போம். அதனை 10 நாட்கள் விழாவாக கொண்டாடுவோம்.
தீபாவளி
விநாயகர் சதுர்த்தி முடிந்த அடுத்து வரும் அமாவாசை நாளில் பூமி, நிலா, சூரியன், சக்தி மையம், ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் அமையும் அந்த நாளில் தீபாவளியாக கொண்டாடுவோம்.
ஐப்பசி அமாவாசை முடிந்த பின் தான் தென்மேற்கு பருவக்காற்று, வடகிழக்கு பருவக்காற்றாக மாறும். தீபாவளி சமயத்தில் நல்ல வெயில் அடித்து காற்று மண்டலம் வளிமண்டலமாக காற்றே இல்லாமல் இருக்கும்.
கந்த சட்டி
முருகன் மருத நிலத்தை உருவாக்கி விவசாயம் ஆரம்பித்ததை தீபாவளியாக நினைவு கூர்ந்து, சட்டிக்குள் சீவசமாதி அடைந்ததை ஐப்பசி அமாவாசியில் இருந்து 6 ம் வளர்பிறை வரை கந்த சட்டி விரதம் இருந்து கந்தர் சட்டி திருவிழாவாக அன்று கொண்டாடி விரதத்தை முடிப்போம்.
பொங்கல்
மார்கழியில் மழைக் கழித்து, தென் செலவு முடியும் நாளை போகிப் பண்டிகையாகவும், வட செலவு ஆரம்ப நாளை தை 1 மகாபாரத வெற்றி திருவிழாவாகவும், பொங்கல் வைத்து கொண்டாடுவோம்.
மார்கழி கர்போட்டம்
மார்கழி 14 ல் (கேட்டை நட்சத்திரத்தில்) மீண்டும் கர்ப்போட்டம் காலம் ஆரம்பித்து மார்கழி 27 வரை மீண்டும் இரவு பகல் பாராமல் வான் கவனித்து அடுத்த ஆடி முதல் மார்கழி வரையிலான மழை பொழிவுகளில் தரவுகள், ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து எடுக்க வேண்டும்.
அனைவருக்கும் ஊர் மக்கள் சர்க்கரை பொங்கல், வித விதமான உணவுகள் தயாரித்து வழங்கி மகிழ்வார்கள். கர்போட்டத்தில் எடுக்கும் தரவுகள், எடுக்கும் இடத்திலிருந்து 5 கிலோமீட்டர் சுற்றளவு தான் பயன் தரும். அதனால் தான் கோயில் இல்லாத ஊரில் குடியிருக்கக் கூடாது என்று சொல்வார்கள். கர்போட்ட காலத்தில் வேறு எந்த சொந்த விழாக்களும், திருவிழாக்களும் இருக்காது.
அடுத்த வருடம் ஏகாதசி அன்று வைகுண்ட ஏகாதசி. அன்று இரவு முழுவதும் கர்ப்போட்ட காலத்தில் எடுத்த தரவுகளைப் பற்றி விவாதித்து, அடுத்த வருடம் மழை அளவினை பொறுத்து, என்னென்ன பயிர்கள் விதைக்கலாம் என்று முடிவு செய்வார்கள்.
மகா சிவராத்திரி
மாசியில் அறுவடை முடித்து மாசி அமாவாசைக்கு முன் வரும் தேய்பிறை 13 ல் மகா சிவராத்திரியாக கொண்டாடுவோம். அன்று பூமி, நிலா, சூரியன் நம் அண்ட மலர்வு நடந்த சிவம் ஆகிய நான்கு முறை நேர்க்கோட்டில் வரும். அன்று நமக்கு ஈர்த்தல் எனும் காந்த சக்தி (ஈத்தர்) அதிகமாக கிடைக்கும் என்பதால், அதை விடிய விடிய வெட்ட வெளியில் அமர்ந்து, வான் பார்த்து தியானம் செய்து உணர வேண்டும்.
அதேபோல் அன்று இரவு முழுவதும் வான் தெளிவாக இருக்கும் என்பதால் வானில் தெரியும் ஆதி ஓரை, ஆதி ஓரையில் உள்ள சிவம் மற்றும் நம் சூரிய குடும்பத்தை சேர்ந்த கோள்களையும், 12 ராசிகளையும், 27 நட்சத்திரங்களையும் காண்பித்து, பாரம்பரிய நிகழ்த்துக் கலைகளை ரசித்துக் கொண்டே நம் தலைமுறையினருக்கு கடத்த வேண்டும். அன்று விடியல் காலை வரும் பிறை நிலாவினை கண்டு விழாவை நிறைவு செய்ய வேண்டும்.
அன்று இரவு அந்தந்த ஊர்களில் எடுத்த கர்ப்போட்ட தரவுகளை மாவட்ட சிவன் கோயில்களில் வைத்து விவாதித்து. இந்த வருட வியாபாரம் செய்வது, கர்ப்போட்ட தரவுகள் சரியாக இருந்ததா? வரும் மழை அளவுகள், கரிநாள், எந்தெந்த பயிர்கள் விதைக்க வேண்டும். அடுத்த வருடம் வியாபார திட்டங்கள் போன்றவற்றை விவாதித்து முடிவுகள் எடுக்கப்படும். கர்ப்போட்ட தரவுகளை வைத்து அடுத்த வருடம் பஞ்சாங்கம், தயாரிக்கும் வேலைகள் ஆரம்பிக்கப்படும்.
இப்படி விடிய விடிய விவாதங்கள் நடக்கும். இப்படி நடந்த விவாதங்கள் அடிப்படையில் பஞ்சாங்கம் தயாரித்து சித்திரை 1 ல் அனைத்து கோயில்களிலும் பஞ்சாங்கம் படிக்கப்படும்.
சித்திரை மாதத்தில் நம் சொந்த விழாக்களை தவிர்த்து, அனைத்து கோயில்களிலும் திருவிழா கொண்டாட்டமாக கொண்டாடி பஞ்சாங்கத்தை மக்களுக்கு கடத்துவார்கள். இப்படி தமிழர்களுக்கு விண்ணியல் நிகழ்வுகள் அனைத்தும் தெரியும் என்பது இந்த கொண்டாட்டங்கள் தான் தரவுகள்.
இப்படி இந்த கடக சங்கராந்தி தென் செலவு சமநாள், வட செலவு சமநாள் போன்ற நிகழ்வுகளை ஒட்டித்தான் நம் விழாக்கள் மற்றும் திரு விழாக்கள் இருக்கும். கோயில் கருவறைகளும், கொடிக்கம்பங்களும் இந்த கடக சங்கராந்தி, மகர சங்கராந்தி, தென் செலவு சமநாள், வட செலவு சமநாள் போன்ற நிகழ்வுகளை துல்லியமாக அறிந்து கொள்ள கட்டப்பட்டவை தான்.
அவற்றை அறிந்து புரிந்து நாம் நம் வழமைகளையும் வாழ்வியலையும் மீட்டெடுத்து இயற்கையை புரிந்து கொண்டு வாழ்வியலை வடிவமைப்போம்.